ஒன்றாரியோ தொழில் நியமங்கள் சட்டம் என்றால் என்ன?
ஒரு முதலாளி தொழில் தளத்தில் வழங்க வேண்டிய ஆகக்குறைந்த உரிமைகளை தொழில் நியமங்கள் சட்டம் (ESA) குறிப்பிடுகின்றது. ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டால் கூட, ஒரு தொழிலாளி தனது உரிமைகளை கைவிட்டுவிட்டதாக கருதப்பட முடியாது. சில குறைவான உரிமைகளுக்கு கைச்சாத்திட்டால் கூட, தொழில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நியமங்களுக்கு நீங்கள் உரித்துடையவர். அதற்கு நீங்கள் பிரஜையாகவோ, நிரந்தர வதிவிடம் அல்லது வேலை அனுமதிப்பத்திரம் உடையவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தகுதிகாண் காலத்தில், பகுதிநேர அல்லது தற்காலிக ஊழியராக இருந்தால்கூட தொழில் நியமங்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றீர்கள்.
எல்லா தொழிலாளர்களையும் சரிசமமாக இந்தச் சட்டம் உள்ளாக்குவது இல்லை. உதாரணத்திற்கு, பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கட்டிட முகாமையாளர்களுக்கு பொது அடிப்படை சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கு உரிமை கோர இயலாமல் இருக்கின்றது. நீங்கள் ஒரு சுய தொழில் செய்பவராக இருந்தால், இந்த தொழில் நியமச்சட்டத்திற்குள் வர மாட்டீர்கள். அதேபோல, மத்திய பெடரல் அரசாங்க தொழில்களான வங்கி, தொலைத்தொடர்பு என்பன கனடா தொழில் குறியீடு (Canada Labour Code) மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்தத் தகவல் தாள் தொழில் நியமங்கள் சட்டத்தின் சகல தகவல்களையும் உள்ளடக்கவில்லை. எனவே, உங்களுக்கு தொழில்தளத்தில் உரிமைகள் தொடர்பாக ஏதாவது கேள்விகள் இருந்தால் தொழிலாளர் நடவடிக்கை நிலையத்திற்கு அழையுங்கள்.
அடிப்படைச் சம்பளம்
உங்களது ஒவ்வொரு மணித்தியால வேலைக்கும் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளம் பெரும்பாலான தொழில்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். தரகு அல்லது துண்டு வேலை அடிப்படையில் வேலை செய்தால் கூட நீங்கள் அடிப்படை சம்பளத்திற்கு உரித்துடையவர். பொது அடிப்படைச் சம்பளமானது மணித்தியாலத்திற்கு $17.20 ஆகும். எனினும் 18 வயதிற்குக் குறைந்த மாணவர்கள் கிழமையொன்றிற்கு 28 மணித்தியாலங்கள் அல்லது அதற்குக் குறைவாக வேலை செய்வார்களாயின் அவர்களுக்கான மணித்தியால அடிப்படைச் சம்பளம் $16.20 ஆகும்.
வாரத்திற்கான மணித்தியாலங்கள்
பொதுவாக நாளொன்றுக்கு உங்களுக்கான உச்ச மணித்தியாலங்கள் 8 ம் வாரமொன்றுக்கு 48 மணித்தியாலங்களுமாகும். உங்களது முதலாளி வாரம் ஒன்றிற்கான உச்ச மணித்தியாலங்களை விட கூடிய மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கான அனுமதியை உங்களிடமிருந்து எழுத்தில் கேட்கலாம். ஒவ்வொரு 5 மணித்தியால வேலைக்கும் சம்பளமற்ற 30 நிமிட இடைவேளை உங்களுக்கு வழங்கப்பட வேண்டும். உங்களது இடைவேளை இரண்டு 15 நிமிடங்களாகவும் இருக்கலாம்.
உங்களது முதலாளி வேலை அட்டவணையினை எப்போது வழங்க வேண்டும் அல்லது கிழமைக்கான ஆகக்குறைந்த மணித்தியாலங்கள் எவ்வளவு என்பதற்கான விதிகளும் இல்லை.
மேலதிக நேர வேலை
வாரமொன்றிற்கு 44 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் உங்கள் வழமையான ஊதியத்தின் ஒன்றரை மடங்கு ஊதியம் வழங்கப்படல் வேண்டும். உங்கள் முதலாளி ஒன்றுக்கு மேற்பட்ட கிழமைகளில் வேலை செய்த சராசரி மணித்தியாலங்களின் அடிப்படையில் உங்கள் மேலதிக வேலை நேரத்தினை கணிக்குமாறு கேட்கலாம். உதாரணத்துக்கு, முதல் கிழமை நீங்கள் 40 மணித்தியாலங்களும் அடுத்த கிழமை 60 மணித்தியாலங்களும் வேலை செய்திருந்தால் அதன் சராசரி வாரம் ஒன்றுக்கு 50 ஆகும். அப்படியாயின் உங்களுக்கு 16 மணித்தியாலங்களுக்கு பதிலாக 12 மணித்தியாலங்களே மேலதிக நேர படியாக வழங்கப்படும்.
மேலும் நீங்கள் எழுத்தில் உடன்பட்டால், மேலதிகமாக வேலைசெய்த ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒன்றரை மடங்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு உங்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
தொழில் பாதுகாப்புடனான லீவுகள்
பின்வரும் தொழில் பாதுகாப்புடனான லீவுகளுக்கு நீங்கள் உரித்துடையவர்.
- சுகயீன லீவு: உங்களது சுகயீனம், காயம், மற்றும் மருத்துவ ரீதியான அவசரத் தேவைகளுக்கு 3 நாட்கள் சம்பளமற்ற சுகயீன லீவு எடுக்க முடியும்.
- குடும்பப்பொறுப்பு லீவு: உங்களது குடும்ப உறுப்பினர் ஒருவரின் சுகயீனம், காயம், மருத்துவரீதியான அவசரம் மற்றும் அவசர தேவைகளுக்கு நீங்கள் சம்பளமற்ற மூன்று நாட்கள் சுகயீன லீவைப் பெறலாம்.
- கர்ப்பகால லீவு: கர்ப்பிணித் தாய்மார்கள் 17 கிழமைகள் சம்பளமற்ற லீவினைப் பெறலாம்.
- பெற்றோர் பொறுப்புக்கான லீவு: தாய்மார்கள் கர்ப்பகால லீவு எடுத்தவர்கள், 61 கிழமைகள் வரை சம்பளமற்ற லீவினைப் பெறலாம். ஏனைய புதிய பெற்றோர்கள் 63 கிழமைகள் வரை சம்பளமற்ற லீவினைப் பெறலாம்.
விடுப்பும் கொடுப்பனவும்
ஒரு முதலாளிக்குக் கீழ் ஒரு வருடம் வேலை செய்த பின்னர் நீங்கள் 2 கிழமைகள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுப்பதற்கு தகுதி பெறுகின்றீர்கள். நீங்கள் 5 வருடங்கள் ஒரு முதலாளிக்குக்கீழ் வேலை செய்த பின்னர் 3 கிழமைகள் விடுப்பு பெற தகுதி பெறுகின்றீர்கள்.
விடுப்பும் அதற்கான கொடுப்பனவுகளும் வித்தியாச மானவைகள். நீங்கள் முதலாவது வருடத்தில் விடுப்புக்கு உரித்து இல்லாவிட்டாலும், அதற்குரிய கொடுப்பனவுக்கு உரித்துடையவர்.
உழைக்கப்பட்ட ஒவ்வொரு டொலருக்கும் 4 வீதத்தினை விடுப்பு ஊதியமாக பெறுவதற்கு உங்களுக்கு உரித்து உண்டு. நீங்கள் ஐந்து வருடங்கள் ஒரு முதலாளிக்குக் கீழ் வேலை செய்த பின்னர் உழைக்கப்பட்ட ஒவ்வொரு டொலருக்கும் 6 வீத விடுப்புத் தொகையினைப் பெற்றுக்கொள்ளலாம். எனினும் ஒவ்வொரு சம்பளக் காசோலையிலும் விடுப்புக்குரிய கொடுப்பனவினை பெற, நீங்கள் ஒரு ஒப்பந்தமொன்றினை செய்துக் கொள்ளலாம்.
பொது விடுமுறைகள்
ஒன்ராறியோவில் வருடம் ஒன்றிற்கு 9 பொது விடுமுறை நாட்கள் அமுலில் உள்ளன.
New Year’s Day, Family Day, Good Friday, Victoria Day, Canada Day, Labour Day, Thanksgiving, Christmas Day, Boxing Day.
பொது விடுமுறைக்கான சம்பளம்: பொது விடுமுறை வந்த வாரத்தில் முன்னுள்ள நான்கு வாரங்களில் உங்களது வழமையான சம்பளத் தொகையின் கூட்டுத் தொகையை 20 ஆல் வகுக்க வரும் தொகையாகும். உங்களது வழமையான வேலைக்கு முன்னுள்ள ஷிப்ட்டும் பொதுவிடுமுறைக்கு அடுத்து வரும் ஷிப்ட்டும் வேலை செய்திருக்கவேண்டும். நீங்கள் பொது விடுமுறை தினத்தில் வேலை செய்பவராக இருந்தால், ஒன்றரை மடங்கு சம்பளத்திற்கும் பொது விடுமுறை வேதனத்திற்கும் எழுத்தில் உடன் படலாம். மாறாக வழமையான வேதனத்தில் பொது விடுமுறையில் வேலை செய்வதற்கும் இன்னொரு நாளில் பொது விடுமுறைக்கான வேதனத்துடன் லீவு (day off) ஒன்றினையும் கூட எடுக்கலாம்.
வேலை நிறுத்தத்திற்குறிய முன்னறிவிப்புக் கடிதமும் கொடுப்பனவும்
நீங்கள் 3 மாதத்திற்கும் குறைவாக வேலை செய்திருப்பின் உங்கள் முதலாளி உங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலைநிறுத்தம் செய்யலாம்.3 மாத காலம் வேலை செய்திருப்பின் நீங்கள் எந்த திகதியில் வேலையிலிருந்து நிறுத்தப்படுவீர்கள் என்பதனை முதலாளி எழுத்தில் தரவேண்டும். உங்களுக்கு முன்னறிவித்தல் கிடைக்காதபட்சத்தில் நீங்கள் அதற்குரிய வேதனத்தை sபெற வேண்டும். நீங்கள் எவ்வளவு காலம் உங்கள் கம்பெனிக்காக வேலை செய்திருக்கின்றீர்கள் என்பதனைப் பொருத்து வேலைநிறுத்த கொடுப்பனவு அல்லது
முன்னறிவித்தல் தீர்மானிக்கப்படும். எவ்வாறு இருப்பினும் அதற்குரிய உச்சவரம்பு 8 வருட சேவைக்கு 8 வாரங்களாகும்.
ஏஜென்சி மூலமான தற்காலிக தொழிலாளர்களுக்கான உரிமைகள்
தொழில் நியமங்கள் சட்டத்தில் ஏனைய ஊழியர்களுக்குள்ள அதே உரிமைகள் ஏஜென்சி மூலமான தற்காலிக தொழிலாளர்களுக்கும் உண்டு. அதற்கு மேலதிகமாக, கீழ் தரப்பட்டவைகளையும் ஞாபகத்தில் வைத்திருப்பது நல்லது:
- நீங்கள்ஏஜென்சி தொழிலாளியாக இருப்பதனாலோ அல்லது உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு உதவியினை வழங்குவதன் காரணமாகவோ, அந்த ஏஜென்சி உங்களிடம் ஒரு கட்டணத்தை வசூலிக்க இயலாது.
- ஒரு ஏஜென்சி உங்களுக்கு 3 மாதங்களுக்கு/ கூடுதலான காலத்திற்கு வேலையொன்றினை வழங்கி, இடைநிறுத்தினால், 1 வாரத்திற்கான முன்னறிவித்தல் அல்லது 1 வாரத்திற்கான சம்பளம் வழங்கப்படல் வேண்டும்.
- அந்த ஏஜென்சி உங்களுக்குரிய சம்பளத்தினை வழங்காவிட்டால், நீங்கள் வேலை செய்கின்ற கம்பெனி (client company) உங்களுக்கு சேர வேண்டிய தொகைக்கு பொறுப்புக்கூறல் வேண்டும்.
உங்களது உரிமைகளுக்காக அவ்வாறு போராடுவது
உங்களது வேலைத்தள உரிமைகளை கேட்பதற்காகவோ அல்லது அவற்றில் ஏதாவது ஒரு உரிமையினை நீங்கள் அனுபவிப்பதால் உங்களை தண்டிக்க இயலாது.
உங்களுக்கு ஏதாவது வேலைத்தளத்தில் பிரச்சனைகள் இருக்குமாயின் அல்லது மேலதிக தகவல்கள் தேவைப்படுமாயின், தயவுசெய்து தொழிலாளர் நடவடிக்கை நிலையத்தின் 416-531-0778 க்கு அழையுங்கள். www.workersactioncentre.org
உங்களது உரிமைகள் மீறப்பட்டால் நீங்கள் ஒரு கோரிக்கையினை தொழில் அமைச்சில் அல்லது சிறிய கோரிக்கைகள் நீதிமன்றத்தில் (small claims court) தாக்கல் செய்யலாம்.1-800-531-5551 | www.labour.gov.on.ca/
Updated October 2024